×

நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு சென்ற ரூ4 கோடி பறிமுதல் விவகாரம்; வருமான வரித்துறை விசாரணை அறிக்கை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு: தலைமை தேர்தல் ஆணையர் தகவல்


சென்னை: பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வருமான வரித்துறை விசாரணை அறிக்கை இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும், என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். திருவள்ளூர் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், மாதவரம், பூந்தமல்லி, ஆவடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பதிவான மின்னணு வாக்கு பெட்டிகள் அந்தந்த மண்டல அலுவலர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு, திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டில் உள்ள தனியார் பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் வைத்து, சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, வாக்கு எண்ணிக்கை அறை, உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் வாக்கு எண்ணும்போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வாக்கு எண்ணும் மையத்திற்கு பார்வையாளர்கள், கட்சி நிர்வாகிகள் வருகை குறித்தும், அவர்களை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான த.பிரபுசங்கர், ஆவடி காவல் ஆணையர் சங்கர், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி சீனிவாச பெருமாள், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் விஜய்ஆனந்த் ஆகியோர் விளக்கமளித்தனர்.

இதனைத் தொடர்ந்து தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக உள்ளது. விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி உடல் நலக்குறைவால் காலமானதையடுத்து எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என்பது குறித்து, இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும். பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, ரயிலில் கொண்டு சென்றதாக பறிமுதல் செய்யப்பட்ட ரூ4 கோடி குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வருமானவரித்துறை மற்றும் காவல்துறை மூலமாக விசாரணை நடைபெற்று வருகிறது. பல்வேறு துறைகள் சார்பாக வரும் அறிக்கைகள் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும்போது தான் முழு விவரம் தெரிய வரும்,’’ என்றார். இந்த ஆய்வின் போது அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு சென்ற ரூ4 கோடி பறிமுதல் விவகாரம்; வருமான வரித்துறை விசாரணை அறிக்கை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு: தலைமை தேர்தல் ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Nayanar Nagendran ,Election Commission ,Chennai ,Chief Electoral Officer ,Tamil Nadu ,Satyapratha Saku ,Income Tax department ,BJP ,Naynar Nagendran ,Election Commission of India ,Dinakaran ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு :...